கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பது சில சமயங்களில் முடியாமல் போகலாம் .
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் உள்ளது. இது போன்ற அவசர காலங்களில் வங்கிகளுக்கு செல்லாமல் வங்கிகளில் உள்ள நமது பணத்தை அவசர தேவைக்கு எடுக்க வீட்டுக்கே வந்து பணத்தை வழங்கும் திட்டத்தை வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடி பணத்தை ஆர்டர் செய்தால் பணத்தை வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா போன்ற வங்கிகள் கொண்டு வந்துள்ளன.
நாட்டின் மிக பெரிய வங்கியான எஸ்பிஐ தற்போது இந்த சேவையை மூத்த குடிமக்களுக்கும், சிறப்பு திறன் கொண்டவர்களுக்கும் வழங்கி வரும் நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவ அவசர காலங்களில் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே பணத்தை ஆர்டர் செய்யலாம் எனவும், மேலும் பணத்தை டெபாசிட் செய்ய விரும்பினாலும் செய்யலாம். இதற்கு கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பார்கள்
மிகப் பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சியும் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வீட்டிலே பணம் எடுக்கும் வசதியை அளிக்கிறது. ரூ .5000 முதல் 25000 வரை பணத்தை இந்த வசதியை பயன்படுத்தி எடுக்க முடியும்.
இதற்காக 100-200 ரூபாய் வரை கட்டணமாக இருக்கும்.
மற்றோரு தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் இந்த சேவையை அளிக்கிறது. வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவும், Bank@homeservice ஈமெயில் ஐடி மூலமாகவும் இந்த சேவையை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.
ரூ 2000 முதல் 200000 வரை பணத்தை இந்த வசதியை பயன்படுத்தி எடுக்க முடியும். இதற்காக ரூ .50 அல்லது 18% கட்டணமாக நாம் செலுத்த வேண்டும்.
வங்கி வேலை நேரமான காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாம் பணத்தை ஆர்டர் செய்தால் இரண்டு மணி நேரத்தில் நம்மிடம் பணத்தை வழங்குவார்கள்.
இந்த வசதியை பயன்படுத்த வங்கி தீர்வு மேலாளர் அல்லது வாடிக்கையாளர் சேவை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
DOORSTEP <city name> to 676766
நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வங்கியின் முகவர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வங்கி தேவையை பூர்த்தி செய்வார்.
இந்த சேவை 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.